தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எஸ்..எஸ் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இருவருக்கும் 3 மகன்கள் உள்ளனர். இதில், இவர்களுடைய இரண்டாவது மகன் ரமேஷ் கோவில்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், ரமேஷ் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடும்ப சூழ்நிலை பற்றியும், பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வாழைக்காய் கடையில் பணிபுரிந்து வருவது குறித்தும் கண்களில் நீர் பொங்க நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இது குறித்த நிகழ்ச்சி சேனலில் ஒளிபரப்பான நிலையில், இதனைப் பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக மாணவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தி கூறியதன் பேரில், புஸ்ஸி ஆனந்த் மாணவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அது மட்டுமின்றி, பேசிக் கொண்டிருக்கும் போதே ரூ.25 ஆயிரம் நிதி உதவியும் செய்துள்ளார். பின்னர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மாணவர் வீட்டிற்கு அனுப்பி, குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான பல சரக்கு பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை வழங்கியது மட்டுமல்லாது, மாணவரின் உயர்கல்வி பயிலத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும், இசையமைப்பாளர் தமனும் மாணவனுக்கு உதவும் வகையில், இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கிக் கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளார். இதுகுறித்து மாணவர் மற்றும் அவரது தாய் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் ரமேஷ் கூறுகையில், "வீட்டில் உள்ள கஷ்டம் அறிந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். பின்னர், வேலைக்குச் சென்று கொண்டே படிக்கும் மாணவர்கள் என்னும் தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் பள்ளி மூலமாக பங்கேற்றேன். அப்போது என் கஷ்ட சூழ்நிலையை நிகழ்ச்சியில் தெரிவித்தேன்.
அதனைப் பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எனக்கு உதவி செய்யுமாறு கூறியதன் அடிப்படையில், நிர்வாகிகள் உதவி செய்தனர். மேலும், இசையமைப்பாளர் தமனும், இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார். என்னைப் போன்று பல பேர் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றார்.
இது குறித்து மாணவரின் தாய் மஞ்சுளா கூறுகையில், "தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வீட்டில் அவ்ளோ கஷ்டம். சென்னை செல்லக்கூட வழி கிடையாது. கடன் வாங்கிக்கொண்டு செல்லட்டுமா என்று கணவரிடம் கூட கேட்டேன். அவர் கடன் வாங்கிக் கொண்டு கண்டிப்பாகச் செல்ல வேண்டுமா வேண்டாம் என்று கூறினார்.
ஆனால், ஆசிரியரோ ஒரு பெரிய வாய்ப்பை விட வேண்டாம். கண்டிப்பாகச் செல்லுங்கள், பணம் நாங்கள் தருகிறோம் என்றனர். அந்நிகழ்ச்சியில், என் மகன் எங்களது வறுமையை எடுத்துக் கூறினான். என் மகன் பேசியதை அனைவரும் பார்த்தது மட்டுமின்றி, நடிகர் விஜய் முதற்கொண்டு பார்த்துள்ளனர்.
மேலும், கடந்த 25ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானவுடன், ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. தமிழக வெற்றிக் கழக கட்சியிலிருந்து, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தம்பி உனக்கு என்ன செய்ய வேண்டும், எதுவென்றாலும் கேள் என்றார். அப்போது, அம்மாவுக்கு சிறியதாக கடை அமைத்துக் கொடுத்தால் போதும். அதில் வரும் வருமானத்தை நம்பி குடும்பத்தை கடத்தி விடுவோம் என்றான்.
உடனடியாக கட்சி நிர்வாகிகளை வீட்டிற்கு அனுப்பி, மகன் கூறியதை விட அதிகமான உதவிகளை செய்தனர். பின்னர், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசிப்பை, பலசரக்கு சாமான்கள் வாங்கிக் கொடுத்தனர். அதோடு மட்டுமின்றி, ரூ.25,000 பணமும் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு உடனடியாக வர வேண்டும் என்று இசையமைப்பாளர் தமனிடம் இருந்து கால் வந்தது. அப்போது நாங்கள் அங்கு சென்று தமனை நேரடியாக பார்த்தோம். அப்போது என்னிடம் பையனை ரொம்ப அழகாக வளர்த்துள்ளீர்கள்.
வேலைக்குச் சென்று சில நேரங்களில் பேருந்தை தவறவிட்டு விட்டால் 3 கிலோமீட்டர் நடந்தே வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என கூறியதற்கு, இனி நடக்க வேண்டாம் தம்பி என இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தார். என் வறுமை அறிந்து, உதவி செய்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், இசையமைப்பாளர் தமனுக்கும் நன்றிகள்.
என் மகன் கஷ்டப்பட்டதை தொலைக்காட்சி மூலமாக அனைவரும் அறிந்து உதவி செய்தது என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு இருக்கின்றது. கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பிள்ளைகள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். நான் பட்ட கஷ்டம் போல் யாரும் கஷ்டப்படக்கூடாது.
வறுமையில் இருப்பவர்களை தமிழக வெற்றிக் கழகம் மூலமாக உதவி செய்ய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன். ஆதரவு அளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார். மேலும், கோவில்பட்டியைச் சேர்ந்த விஜய் ரசிகரான மற்றொரு நபரும் வீட்டிற்கு வந்து சில பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "என்னம்மா கண்ணு செளக்கியமா?".. 'கூலி' படத்தில் ரஜினியுடன் இணைந்த சத்யராஜ்! - sathyaraj in coolie