தருமபுரி: மாவட்ட முன்னேற்றத்திற்காக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடுவார் என அக்கட்சியின் தருமபுரி மாவட்ட தலைவர் சிவா தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா தலைமையில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நேற்று (நவ.17) நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள், கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு கட்சித் துண்டுகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சி 'நயன்தாரா' ஆவணப்படத்தில் இடம்பெறுமா? நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம்.. என்ன செய்யப் போகிறார் தனுஷ்?
பின்னர், கட்சி நிர்வாகிகளிடையே பேசிய தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா, “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கட்சி தலைவர் விஜய் போட்டியிடுவார் என உறுதியாக கூறுகிறேன்.
மேலும், எங்கள் மண் அதியமான் வளர்ந்த மண், அவ்வையார் வளர்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று முதலமைச்சராக வேண்டும். தருமபுரியில் தான் போட்டியிடுவேன் என விஜய் கூறி 10 நாட்கள் ஆகிறது. ஆனால், அதனை இன்று தான் அறிவிக்கிறேன். தவெக தலைவர் விஜயை தருமபுரியில் நிற்க வைத்து மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சிகளை செய்வேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்