சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலை மற்றும் அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், மரியாதை செலுத்த வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கருநாகராஜன் கூறுகையில், "தமிழகத்தில் இருக்கும் மறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தலைவர்களை எல்லாம் எடுத்துக்கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் கண்காட்சியை ஏற்பாடு செய்யும் பணியை பாஜக செய்து வருகிறது.
அதே போன்று இந்த ஆண்டும் 116 சுதந்திரப் போராட்ட தலைவர்களுக்கு மரியாதை செய்வது, கருத்தை மக்களுக்கு கொண்டு செல்வது, புத்தகம் வெளியிடுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது, மாணவர்களுக்கு பிரசுரங்கள் என கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வழங்க உள்ளோம்" எனக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சிறு வணிகம், நடுத்தர வணிகம், பெரிய வணிகம் என்ற அளவிலே பன்மடங்கு தொழில் வரி உயர்ந்திருக்கிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. இதனை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கொள்ளிடத்தில் இருந்து வெளியேற்றக் கூடிய நீரை சில ஆறுகளில் திறக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று விவசாயிகள் கேள்வி கேட்கிறார்கள். உடனடியாக அனைத்து ஆறுகளுக்கும் தண்ணீர் செல்லக்கூடிய நிலையை பொதுப்பணித்துறை ஏற்படுத்த வேண்டும்.
திருச்சி கொள்ளிடம் பாலத்திற்கு கீழ் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க கட்டப்பட்ட தடுப்பணை உடைந்துள்ளது. அதேபோல, அங்கு கட்டப்பட்ட உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்து விழுந்து இருக்கிறது, உடனடியாக பொதுமக்களுக்கான பாதுகாப்பை அப்பகுதியில் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
அதனை அடுத்து, தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "எங்கு போதை மருந்து வியாபாரம், போதைப்பொருள் கடத்தல் நடந்தாலும் அதில் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுடைய பாதுகாப்பிலும் உதவியிலும் தான் நடக்கிறது.
இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு கிடையாது. உதயநிதி துணை முதலமைச்சரான உடன் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரப் போகிறாரா? மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் பெருக்கெடுத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆனால் என்ன, முதலமைச்சர் ஆனால் என்ன? அவர் முதலமைச்சரானால் நாட்டிற்கு நல்லது நடக்குமோ நடக்காதோ, ஆனால், அவர்கள் வீட்டிற்கு வேண்டுமானால் வசதிகள் பெருகும்.
எந்த சூழ்நிலையில், எந்த காரணத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதில் எந்த மாற்றமும் இல்லாத போது, அதிமுகவில் இணைவது என்பதற்கான வார்த்தைக்கு இடமில்லை. அதிமுகவின் தோல்விக்கு காரணமே பழனிசாமியின் துரோகச் சிந்தனையும், திமிருத்தனமும் தான். பழனிசாமி என்ற அந்த தீய மனிதரை, தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டும் காலம் விரைவில் வரும்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மத்திய அரசே பேரிடராக இருக்கிறது.. அப்போ எப்படி?” - கனிமொழி விமர்சனம்!