மதுரை: மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டபேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும். இம்முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு தமிழக அரசை மாற்றாந்தாய் மனப்பக்குவத்துடன் நடத்தவில்லை. புயல், வெள்ள பாதிப்பின் போது மத்தியக்குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் நிதி தமிழகத்திற்கு வந்தது.
மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை, தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவுக்குள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டால் 2026-க்கு பிறகு அதிமுக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 2026-ல் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை, மூடநம்பிக்கையுடன் பேசுவது போல தெரிகிறது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: இபிஎஸ் மீது திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டால் பிற கட்சிகளுக்கு தான் பலன் அமையும். எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு ஆட்சியின் ஊழல் பயத்தால் திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார்.
கோடநாடு கொலை வழக்கு, அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிகமே. அதிமுகவில் என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் வேகமாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் முன்னாள் அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும், பாஜக கூட்டணிக்கு அதிமுக வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன், திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், நான் காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்," என்று தெரிவித்தார்.