தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அரசை கண்டிப்பது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், "சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் இறந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனவும் கூட்ட நெரிசலால் பலர் மயக்கமடைந்தனர் எனவும் பொதுமக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அரசு தரப்பில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வருகை புரிவார்கள் என தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர் இதற்கான முழு பொறுப்பையும் முதல்வர் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், முதல்வருக்கும் அவரது குடும்பத்தைத் தவிர யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னேற்பாடு பணிகள் செய்யாதது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய குறைபாடு என குற்றம்சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், திருட்டு, வழிப்பறி, கூலிப்படைகள் மூலம் கொலை, ஆகியவை தமிழ்நாட்டில் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கெல்லாம் காரணம் கஞ்சா மற்றும் போதை மருந்தை கட்டுப்படுத்த தவறியதால், பொது மக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: மெரினா மரணங்கள்: கனிமொழி சொன்ன அட்வைஸ்! மா.சு. கொடுத்த ரியாக்ஷன்!
தொடர்ந்து பேசிய அவர் ,"அதிமுகவில் இரட்டை இலை இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு தங்களைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கண்விழித்து பழனிசாமிக்கு காவடி தூக்குவது தவறு என்று உணர்ந்து திருந்தினால் தான் அதிமுகவை மீட்டெடுக்க முடியும்.
அமமுக மக்களின் ஆதரவோடும், கூட்டணி பலத்தோடு தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். திமுகவிற்கு உதவுகின்ற வகையில் பீ(B) டீமாக இருக்கிற பழனிசாமியையும் வீழ்த்துகிற காலம் 2026 ல் வரும். தமிழ்நாட்டில் சனாதனம் என்று பேசி, என்னவென்றே தெரியாத எங்களுக்கு அதை தெரிந்து கொள்கிற ஆர்வத்தை சிலர் உருவாக்குகிறார்கள்" என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மாவட்டச் செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்