திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைந்துள்ளது திருச்செந்துறை கிராமம். இந்த கிராமத்தின் பெயர் தான், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவால் உச்சரிக்கப்பட்டது. 2022 முதல் இந்த கிராமம் பரபரப்பாக பேசப்படுவதற்கு காரணம் வக்ஃபு வாரிய நிலம் தொடர்பான சர்ச்சை தான்.
நாடாளுமன்றத்தில் நேற்று (ஆக. 8) வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் பல ஏக்கர் இடம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு பேசினார்.
இதனையடுத்து அந்த கிராமத்தின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக கள ஆய்வு செய்தது ஈடிவி பாரத். நமது செய்தியாளர் அப்துல் கரீம் கிராமத்தினரை நேரில் சந்தித்து பேசினார். ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம், காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் அழகான விவசாய கிராமம். இந்துக்களும், இஸ்லாமியர்களும் சேர்ந்து வாழும் இப்பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக தனது நிலத்தை விற்க முயற்சித்துள்ளார். பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது, சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில், 'ஆட்சேபனை இல்லா சான்றிதழ்' பெற வேண்டும்," என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்தது அவர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த கிராமமும் எதிர்த்து போராட்டம் நடத்தியது.
இதுகுறித்து திருசெந்துறை கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜா தெரிவிக்கையில், “ மொத்தம் 389 ஏக்கர் நிலத்தை வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என கூறுகின்றனர். ஆனால் இதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. மத்திய அரசு இந்த பிரச்சினை பற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போன்று தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு வக்ஃபு வாரியத்திற்கு இந்த இடம் சொந்தமில்லை, பூர்வீகமாக கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும்." என்றார்.
அதனைத்தொடர்ந்து, திருச்செந்துறையைச் சேர்ந்த ராஜா கூறுகையில், “ தற்போதைய நிலையில் கிராமத்தில் பத்திரப்பதிவுக்கு எந்த தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் இந்த வக்ஃபு வாரிய பிரச்சனை குறித்த அச்சத்தால் நிலம் விற்பனை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் இந்த ஊரில் நிலம் வாங்க முன்வருவதில்லை. இதனால் அவசரத்திற்கு நிலத்தை விற்க எண்ணுவோர் விலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ 2022 ஆம் ஆண்டு வக்ஃப் வாரியத்திலிருந்து சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு, திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் உள்ள 389 ஏக்கர் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டது. இதனால், பத்திர பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து, வக்ஃப் வாரிய அதிகாரிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பத்திரபதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. தற்போது திருச்செந்துறை கிராமத்தில் நிலங்களை வாங்குவதற்கும், விற்பதற்கும் எந்த தடையும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்காலிகத் தீர்வு கிடைத்திருப்பதாக அரசு கூறினாலும், மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கினால் தான் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும் என்பது திருச்செந்துறை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மத்திய பாஜக அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா; நாடாளுமன்றத்தில் முழங்கிய கனிமொழி! - Waqf Amendment bill 2024