திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி வருண்குமார் எச்சரித்து இருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ். பியை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
சீமான்: இந்நிலையில், தன்னையும் தனது குடும்பப் பெண்களையும் பற்றி இழிவாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பி வருண்குமார் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டதற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் வெளியிட்ட 8 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவல்துறை பணியில் விருப்பப்பட்டு சேர்ந்தேன். மேலும் எனது 13 ஆண்டுகால IPS வாழ்க்கையில் எல்லா ஆண்டுகளிலும் Outstanding Rating மட்டுமே உயர் அதிகாரிகளிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளேன். நான் ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆகையால் காவல்துறை பணியில் சேர்ந்த பிறகு சாமானிய மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று முனைப்போடு செயலாற்றி வருகிறேன்.
இந்நிலையில் சமீபத்தில், ஒரு YouTuber பதிவு செய்த சர்ச்சையான அவதூறுகளால் Cyber Crime காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சட்ட அடிப்படையில் பணியாற்றியதற்காக, அந்த YouTuber சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் என்னை கடுமையாக (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். அது விமர்சனத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது. எனவே, அதற்கு எதிராக Civil and Criminal Defamation Notice என் வழக்கறிஞர் மூலம் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன்.
பொது வாழ்வில் இருக்கும் எங்களுக்கு ஆபாச தாக்குதல்கள் ஒரு பொருட்டே அல்ல. நான் சட்டப்படி இந்த Notice அனுப்பிய ஒரே காரணத்திற்காக என்னை தாண்டி என் குடும்பத்தினர்கள், பெண்கள், குழந்தைகள் என என்னை சார்ந்தவர்கள் மீது வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் பரப்பினர்.
எக்ஸ் தளத்தில் என் குழந்தைகள் மற்றும் என் குடும்ப பெண்களின் புகைப்படங்களும் தரம் தாழ்ந்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது. இது ஒரு கட்டத்தில் என் குடும்பத்தினருக்கே கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அச்சுறுத்தலாக உருமாறியது. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்தரப்பில் ஈடுபடும் இந்த கணக்குகளை ஆராயும் போது இவை அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள் வரை முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனெனில், இவை அனைத்தும் போலிக் கணக்குகளாகவும் தொடர்ந்து இதே வேலையைச் செய்து வருபவையாகவும் உள்ளன. நான் இந்த விசயத்தில் அளித்த 3 புகார்களில் 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு Cyber Crime Wing போலீசார் இதனை விசாரித்து வருகிறார்கள்.
ஒரு சராசரி குடும்ப நபராக இருந்து எனது குடும்பத்தின் மீது உள்ள அக்கறையில் இந்த எக்ஸ் இணைய உரையாடல்களிலிருந்து தற்காலிகமாக நானும் எனது மனைவியும் விலக முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவு தற்காலிகமானது. நாங்கள் பயத்தினாலோ, அருவருப்பினாலோ, மேற்கொள்ளவில்லை.
ஒரு மாவட்ட கண்காணிப்பாளராக உள்ளவரின் குடும்பத்தினரையே இவர்கள் இந்தளவிற்குத் தாக்குகிறார்கள் என்றால் சாதாரண மக்களையும், பெண்களையும் என்ன செய்வார்கள்? இன்றுவரை பதிவிட்ட எந்த ஆபாச பதிவுகளையும் நீக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை எனும்போது இந்த கூட்டத்திற்குச் சட்டத்தின் முன் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.
இந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். எந்தவித சமரசமும் இன்றி இந்த சட்ட நடவடிக்கைகளை தொடரந்து மேற்கொள்வேன்" என்று வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமானுக்கு வருத்தக் கடிதம் எழுதிய சிவராமன்.. மரணத்தில் என்ன சொல்கிறது நாதக?