திருச்சி: ரத்தத்தில் ஓவியம் வரையும் கலாச்சாரம் இளசுகள் மத்தியில் பேஷனாக மாறி வருகிறது. ரத்தத்தில் கடிதம் எழுதியதற்கு ஒரு படி மேலே சென்று காதலர்களின் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து அதற்கு தங்களது ரத்தத்தினால் பெயிண்ட் செய்து பரிசளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், திருச்சியில் தடை செய்யப்பட்ட ரத்த ஓவியம் (Blood Art) வரையும் கலாச்சாரத்தைத் துவங்கியுள்ள ஓவியரின் விபரீத செயல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருச்சி திருவானைக்காவல் மேம்பாலம் அருகே முகிலன் என்பவர் பெட் ஷாப் ஒன்று வைத்துள்ளார். மேலும், இவர் நன்கு ஓவியமும் வரையக்கூடியவர். ஓவியக் கலைஞரான முகிலன் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களைப் பெற்று அதை வரைந்து கொடுத்தும் வருகிறார்.
இந்த நிலையில், விபரீதமாக இவர் வரையும் ஓவியங்களில் மனித ரத்தத்தை பெயிண்டாக பயன்படுத்தி அதனை சோசியல் மீடியாவில் வீடியோவாகவும் வெளியிட்டு வந்துள்ளார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் சிலருக்கு அந்த ஓவியம் பிடித்துப் போய் தங்களுக்கும் இதுமாதிரி ஓவியம் வேண்டும் என்று முகிலனை அணுகி வருகின்றனர். இன்ஸ்டாவில் இதற்காக இவருக்கு நிறைய பாலோவர்ஸ்களும் இருக்கிறார்களாம்.
இன்ஸ்டாகிராமில் உள்ள இவரது பக்கத்தில் ரத்தம் எடுப்பது, வரைவது, ஓவியத்தில் ரத்தத்தில் பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட அனைத்து காட்சிகளையும் பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும், இதற்காக ஸ்ரீரங்கம் தேவி தெரு பகுதியில் ஒரு ரத்த சேமிப்பு நிலையத்தில் ரத்தத்தைச் சேமிக்கக் கூடிய வேலையை இவரும், இவரது ஊழியர்களும் செய்து வருகின்றனர். இரண்டு எம்எல் ரத்தத்தை எடுத்து அதன் மூலம் ஓவியத்தில் பெயிண்ட் செய்து கொடுக்கும் முகிலன் 1500 ரூபாய் முதல் 4000 வரை ஓவியத்தின் அளவுக்கு ஏற்றார் போல் கட்டணம் வசூலித்து வருகிறார்.
இது போல ரத்தத்தில் ஓவியம் வரைவதற்குக் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை தடை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், தற்போது திருச்சியில் ஒருவர் இதனைத் துவக்கி சமூக வலைத்தளத்தில் அவர்களின் ரத்தத்தை எடுப்பதிலிருந்து வரைவது வரைக்கும் காட்சிகளைப் பதிவு செய்து பதிவேற்றம் செய்து வருவது கவனம் பெற்றுள்ளது. காவல்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து ரத்த ஓவியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பலரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: மனைவி சந்தேகப்பட்டதால் அலப்பறை.. வைரல் ஆசாமியை உள்ளே தள்ளிய போலீஸ்!