திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் என 5,000க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று என்ஐடியில் உள்ள மகளிர் விடுதியில் இணையதள பிரச்னையை சரி செய்ய வந்த ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், அங்கிருந்த மாணவி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவ, மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து என்ஐடி நிர்வாகத்திடமும், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து என்ஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது, அவர்கள் மாணவிகளை கண்டித்ததாகவும், ஆடைகளை ஒழுங்காக அணியும் படியும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த என்ஐடி மாணவ, மாணவிகள், விடுதியின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளை விமர்சித்த விடுதி வார்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், மாணவிகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று (ஆக.30) அதிகாலை வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் என்ஐடி நிர்வாகம் இன்று காலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனாலும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ள முக்கிய வாயில் முன்பு திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் என்ஐடிக்கு வந்த திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவ மாணவிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பின்னர், விடுதி காப்பாளர்கள் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டனர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து பேசிய திருச்சி எஸ்பி வருண் குமார், "காவல்துறை தரப்பில் புகார் அளித்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் கல்லூரி மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அது குறித்து முழுமையாக விசாரிக்க மகளிர் விடுதிக்கு பெண் காவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மாணவிகளின் குறைகளைக் கேட்டு கூறுவார்கள்.
இது போன்ற சம்பவங்களில் புகார் அளிப்பவர்கள் மீது எந்த குறையும் கூறக்கூடாது. புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை தான் எடுக்க வேண்டும். கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் காவல்துறை சார்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
மேலும், இங்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தாலும், நேற்று பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இனி அதுபோல் நடைபெறாத வகையில் கவனமுடன் இருக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்தப் பணியாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில் மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, என்ஐடி வளாகத்தில் உள்ள பாதுகாவலர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : இணைப் பதிவாளர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாக ஆராய்ச்சி மாணவி பரபரப்பு புகார்! - stud complaint tnteu ass registrar