திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை என்ற ஊரில் இருக்கும் படித்துறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ’நமக்கு நாமே’ என்னும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் பறவைகள் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பறவைகள் பூங்கா ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் அமையவிருக்கிறது.
இதன் கட்டடப் பணிகள் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி இதை தொடங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் மிகக் குறைவாக உள்ளது, தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதுவரை பறவைகள் பூங்கா அமைக்கும் பணியானது 80 விழுக்காடுகள் நிறைவடைந்துள்ளது. மேலும், இங்கு ஒரு நாளைக்கு 500 முதல் 600 கார்கள் வரை நிறுத்தும் வகையில் கார் பார்க்கிங் வசதிகள் அமைக்கப்பட உள்ளன. பார்வையாளர்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவே இந்த பார்க்கிங் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் தொடங்கப்படும் போது பறவைகள் பூங்காவும் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதேபோல், முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நிதி கேட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
பூங்காவில் அமைக்கபட உள்ளவை: இந்த பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், இந்த பூங்காவில் அரிய வகை பறவைகளும் வளர்க்கப்பட உள்ளன. குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை போன்று செயற்கையான இடங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
மலைகள், காடுகள், கடற்கரை, சமவெளி மற்றும் பாலைவனம் போன்ற நிலப்பகுதிகளை தத்ரூபமாக அமைக்கப்படுகின்றன. கூடுதலாக மினி தியேட்டர் ஒன்றும், அதில் 50 பேர் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் அமைகிறது. இதில் அறிவியல்பூர்வ படங்களை திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் அழகிரி படத்துடன் ஒட்டப்பட்டுள்ள திமுக வெற்றி போஸ்டர்! -