திருச்சி: திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. இந்தப் புகாரின் பேரில், திருச்சி மாவட்டம் தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் போது, தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் இருக்கும் இரண்டு பேக்கரிகளில் நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து, கேக் மற்றும் பிரட் தயார் செய்வதற்கு பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
அழுகிய முட்டைகளில் கேக்: இதையடுத்து, சுமார் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் அழுகிய முட்டைகளைக் கொண்டு தயார் செய்த 215 கிலோ பேக்கரி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பின் அந்த பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமத்தையும் அதிகாரிகள் ரத்து செய்து, தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு கடைக்கு சீல் வைத்தனர். மேலும், இந்த பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 58இன் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதை சாக்லெட் விற்ற வேலையில்லா பொறியியல் பட்டதாரி கைது!
இது குறித்து பேசிய மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு, “இது போல் விற்பனையாளர்கள் அழுகிய முட்டைகள், காலாவதியான பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும்.
அதேபோல், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அல்லது சுகாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து விற்பனை செய்வது பொதுமக்களுக்கு தெரிய வரும் போது மாவட்ட புகார் எண்: 96 26 83 95 95 / மாநில புகார் எண்: 94 44 04 23 22 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும். தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும்” என்றார்.
மேலும் இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய பொன்ராஜ், செல்வராஜ், மகாதேவன், ஷீபா, செல்வி. ஹர்ஷவர்த்தினி மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்