தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் லட்சுமணன் முன்னிலையிலும் இன்று (பிப்.23) மாநகராட்சி பட்டேல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், டெல்லி சலோ என்ற பெயரில், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு, தங்களது வேளாண் விளை பொருட்களுக்கு எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின் படி, கட்டுப்படியாகக் கூடிய நியாயமான குறைந்தபட்ச விலை அறிவிக்க வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனைப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இரும்புக் கரம் கொண்டு விவசாயிகளை அடக்கி ஒடுக்குவது கண்டனத்திற்குரியது. இப்போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ஒருவர் துப்பாக்கி குண்டிற்கு இரையாகியிருப்பது அதிர்ச்சிகரமானது.
இதற்கு இரங்கலை இம்மாமன்றம் தெரிவித்து, அந்த விவசாயியின் ஆன்மா அமைதி பெற இரு நிமிடம் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அவருக்காக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விவசாயிகளின் பிரச்சனையை மத்திய அரசு, அவர்களை அழைத்துப் பேசி, விரைந்து நல்ல தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அத்துடன் தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், 2024 - 2025க்கும் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை, திராவிட மாடல் அரசிற்கான உதாரணமாக அமைந்துள்ளது. இதனை வரவேற்றும், இதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாமன்றக் கூட்டப்பொருளில், சாதாரணக் கூட்டத்தில் 131 பொருட்களும், அவசரக் கூட்டத்தில் 15 பொருட்களும் பெரிய அளவிலான விவாதங்கள் ஏதும் இன்றி அமைதியாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாமன்றக் கூட்டத்திற்கிடையே பேசிய துணை மேயர் சு.ப. தமிழழகன், "தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளிலேயே, கும்பகோணம் மாநகராட்சி மட்டும் தான் வரி வசூலில் பின்தங்கிய நிலையில் உள்ளது" என வருத்தம் தெரிவித்தார்.
இதையடுத்து, பேசிய ஆணையர் லட்சுமணன், "வரி வசூலில் பல வட்டங்களில் 70 சதவீதம் வசூல் ஆகாமல் நிலுவையாக உள்ளது. கடந்த ஆண்டை விட 15 சதவீதம் வருவாய் உயர்ந்திருந்தால் மட்டுமே மத்திய அரசின் மானியம் மாநகராட்சிக்குக் கிடைக்கும் என்றும், அந்த நிலையை எட்ட இன்னும் ரூபாய் 10 கோடி அளவிற்கு வசூலாக வேண்டிய நிலை உள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் அதிநவீன ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!