கன்னியாகுமரி: விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் வரலாற்றை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 75 இடங்களில் தியாக பெருஞ்சுவர் தனியார் அறக்கட்டளைகள் சக்ரா விஷன், விவேகானந்தா கேந்திரம் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் முதல் தியாக பெருஞ்சுவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சக்ரா விஷன் இந்தியா பவுன்டேசன் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுவர் 10 அடி உயரம், 60 அடி நீளத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில், இந்த தியாக பெருஞ்சுவரை ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று திறந்து வைத்தார்.
இந்தியா முழுவதும் உள்ள 1,040 சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்களும், அசோக சின்னம், பாரத மாதா படம், சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், நேதாஜி, பகத்சிங் ஆகியோர் உருவம் பொறிக்கப்பட்ட படங்களும், தியாக பெருஞ்சுவரில் இடம் பெற்றுள்ளன. இரண்டு பக்க சுவர்களிலும், தியாகிகளின் முழு விவரங்களும் தெரியும் விதமாக கியூஆர் குறியீடு பொறிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசுகையில், “பாரத நாடு சகஜமான காலங்களில் உருவாகவில்லை, பல தலைமுறைகள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆணித்தரமாக செயல்படுத்தி உணர்ந்து உருவாக்கி கொடுத்தது. இந்த பாரத பண்பாட்டை யாராலும் அழிக்க முடியாது. பாரத நாட்டினுடைய 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி விட்டோம்.
10 கிலோமீட்டர் எல்லைக்குள் சுற்றிப் பார்த்தால் அங்கு கட்டாயமாக சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் இருப்பார்கள். பணக்காரன், ஏழை வேறுபாடு இல்லாமல் அனைவரும் போராடினார்கள். இதுபோன்று நாட்டின் 100 இடங்களில் சுவர்கள் வரவேண்டும். சுவாமி விவேகானந்தர் தவம் செய்த இடம், விவேகானந்தர் இங்கிருந்து தொடங்கி உலகை வென்றார். எனவே, இந்த இடத்தில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். உலகின் குருவாக பாரதம் உருவாக வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்