ஈரோடு: நல்லகவுண்டன் பாளையம் கன்னைமார் காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். அரசால் கொடுக்கப்பட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், மின் விளக்கு, சாலை, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இறந்து போனால், அவர்களது உடலை புதைப்பதற்கு அல்லது எரியூட்ட கூட இடம் இல்லாமல் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக பொது மக்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு என்று தனியாக மயானம் இல்லாத காரணத்தால் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்ய பல கிலோ மீட்டர் தூரம் சென்று மின்சார எரியூட்டும் மயானத்தில் உடலை தகனம் செய்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பழங்குடியின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இறந்து போன நபரின் உடலை அடக்கம் செய்ய அருகாமையில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்றால் அடக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கூலி தொழிலாளரான சாமிதுரை, வேலை செய்யும் இடத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இறந்த சாமிதுரையின் உடலை அடக்கம் செய்ய இடம் இல்லாத காரணத்தால் வீட்டில் வைக்கப்பட்ட உடலை எடுத்து செல்லாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் சித்தோடு காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் சாமி துறையின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுடுகாடு அமைப்பதற்கான இடம் ஒதுக்காமல் உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல மாட்டோம் என உறவினர்கள் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் சுடுகாடு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உயிரிழந்த சாமி துறையின் உடலை பவானி மின் மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ஏஐ கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்!