திருப்பூர்: உடுமலை அருகே முறையான பாதை வசதி இல்லாத காரணத்தால், கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி சுமார் 4 கிலோ மீட்டர் மலைப் பாதையில் கொண்டு சென்ற அவலம் நேர்ந்துள்ளது. இந்த நிலையில், வனப்பகுதியில் மண் சாலை அமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குருமலை மலைவாழ் பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவர் 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சுமதிக்கு நேற்று தொடர்ந்து வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஆனால், குருமலையிலிருந்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்ல வேண்டுமானால் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி நிலை உள்ளது. ஆகையால், குறுமலையிலிருந்து கரடு முரடான பாதையில் சுமார் 4 கிலோ மீட்டர் பயணம் செய்தால், திருமூர்த்தி மலையை அடையலாம் என்று கர்ப்பிணியைத் தொட்டில் கட்டி கருஞ்சோலை வழியாக கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை ஆசிரியை ரமணி கொலை... தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்..!
காலை 11 மணியளவில் துவங்கி மதியம் 2.30 மணியளவில் உடுமலை அரசு மருத்துவமனை அடைந்துள்ளனர். தற்போது மயக்கமடைந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணை தூளியில் கட்டி காட்டு வழியாக சுமந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருமலை பகுதியில் இருந்து திருமூர்த்தி மலை வரை வனப்பகுதியில் மண் சாலை அமைத்து கொடுத்தால் மிகக் குறுகிய நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்தடையலாம் என மலைவாழ் மக்கள் தற்போது வலியுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்