திருச்சி: திருச்சியில் புதிய சிப்காட் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனையடுத்து, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் 150 ஏக்கரில் சிப்காட் அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும், அந்த இடம் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜா கூறியதாவது, "மத்திய அரசு நிறுவனமான எச்.ஏ.பி.பிக்குச் சொந்தமான இடம் சிப்காட் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தை எச்.ஏ.பி.பி நிர்வாகத்திடம் இருந்து பெறுவதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் எனக் கூறினார். இந்த இடத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைந்தால், திருச்சியைச் சுற்றியுள்ள டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும் எனவும், இந்த இடத்தைச் சுற்றி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சியில் சிப்காட் அமைக்கப்படுவதாகவும், அதிக வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையிலான நிறுவனங்கள் புதிய சிப்காட்டில் இருக்கும் என்று கூறினார். இந்த பகுதியில் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எந்தெந்த துறை சார்ந்த நிறுவனங்கள் அமையப்பட உள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறினார். தமிழகத்தில் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, திறமைகளின் தலைநகரமாக இருக்கிறதாக புகழாரம் சூட்டினார். இங்கு எந்த நிறுவனம் தொடங்கினாலும் அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் உள்ளது எனக் கூறிய அவர், அதனால் பலர் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருகிறார்கள் என்றும், அதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விவசாயிகள் கடன் வாங்குவதை நிறுத்துங்கள்" - அமைச்சர் டிஆர்பி ராஜா!