சென்னை : சென்னை, குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை செயலர் பணிந்தர் ரெட்டி, போக்குவரத்து கழக 8 மண்டல இயக்குனர்கள், அண்ணா தொழிற் சங்கம் சார்பில் கமலக்கண்ணன், தொ.மு.ச.சார்பில் நடராஜன், சிஐடியு சார்பில் ஆறுமுக நயினார், ஐ.என்.டி.யு. சார்பில் வில்சன் உட்பட 84 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களை நியமிக்கக் கூடாது, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள படிகள் உள்ளிட்ட 54 கோரிக்கைகள் முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடைபெற்றது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலக்கண்ணன், "3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை இருந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில், நான்கு ஆண்டுகளாக தள்ளி வைத்துள்ளனர். இதனை ஆளும்கட்சி தொழிற்சங்கமும், அதனுடன் இருக்கும் தொழிற்சங்கங்களும் ஆதரித்தனர்.
ஆனால் அதை அண்ணா தொழிற்சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை 12 மாதம் காலதாமதமானதால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 3600 இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
அதேபோல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான டிஏ தொகை நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 54 கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசால் நடைமுறைப்படுத்தவே முடியாது. ஏன் என்றால் அவர்களிடம் நிதி வசதி இல்லை.
ஆண்டுக்கு ஆயிரம் பேருந்துகள் வாங்குவோம் என கூறினார்கள். ஆனால் அது போல் எதுவும் வாங்கவில்லை. அதேபோல் போக்குவரத்து பணிகளுக்கு ஆட்களும் இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. நேரடியாக ஆட்களை தேர்வு செய்யாமல், டெண்டர் முறையில் ஆட்களை தேர்வு செய்வதால் இந்த அரசால் சமூக நீதி முழுமையாக மீறப்படுகிறது.
மேலும், போக்குவரத்து ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பதை எங்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது. சென்னை அருகே உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் தனியார் வசம் ஒப்படைப்பதைக் கண்டித்து அறிக்கை கொடுத்துள்ளோம். அரசு இடைக்கால நிவாரனத்தை உடனடியாக வழங்கவில்லை என்றால் தொழிற்சங்கம் நிர்வாகிகள் அனைவரும் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்" என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொ.மு.ச தலைவர் நடராஜன், "போக்குவரத்து துறை பேச்சுவார்த்தையில் முதலில் 45 சங்கம் பங்கேற்ற நிலையில், தற்போது 84 சங்கங்கள் வரை பங்கேற்பதால் அதை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கியதை போலவே அனைத்து போக்குவரத்து கழகத்திற்கும் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறோம்" என கூறினார்.
பின்னர் பேசிய சி.ஐ.டி.யு நிர்வாகி ஆறுமுகம் நயினார், "அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கன தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும். அதில், ஓய்வு பெற்றவர்களின் பிரச்னைகள் மற்றும் ஓய்வூதியம் குறித்தும், ஓய்வூதியதாரர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படி குறித்தும் முதலாவதாக பேச வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பு.. 84 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு! - tamil nadu transport workers