ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், கடந்த 1914ம் ஆண்டு ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக பாம்பன் கடல் வழியாக கப்பல்கள் வந்து செல்லும்போது, திறந்து மூடும் வகையில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் அமைக்கப்பட்டு 106 ஆண்டுகள் கடந்த நிலையில், பாலம் சேதமடைந்ததால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் புதிய ரயில்வே தூக்கு பாலம் சுமார் ரூ.550 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி அதன் பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன், ரயில்வே ஊழியர்கள் புதிய ரயில்வே தூக்கு பாலத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹைட்ராலிக் செங்குத்தான தூக்கு பாலத்தை மேலே தூக்கி, இறக்கி வெற்றிகரமாக சோதனை செய்தனர்.
இதையும் படிங்க : பாம்பன் பாலம்: பொறியியல், கட்டடக்கலை அதிசயம் குறித்த சிறப்புத் தொகுப்பு!
அதன் தொடர்ச்சியாக இன்று ( நவ 7) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மண்டபத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரம் வரை இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயிலை புதிய பாலத்தின் மீது 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர்.
இந்த சோதனை ஓட்டம் குறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் கூறுகையில், ”இன்று நடைபெற்ற சோதனை ஓட்டமானது புதிய பாம்பன் பாலத்தின் துல்லியம் மற்றும் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. இது மண்டபம் - ராமேஸ்வரம் பிரிவில் மணிக்கு 121 கிமீ வேகத்தையும், பாம்பன் பாலத்தில் மணிக்கு 80 கிமீ வேகத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது” என ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகின்ற 13ம் தேதி மண்டபம் ரயில் நிலையத்துக்கு நேரில் வந்து, பாம்பன் புதிய பாலத்தில் நிறைவடைந்த பணிகளைப் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவில் ரயில் போக்குவரத்து தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்