நீலகிரி: நீலகிரி மாவட்டம், முதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லக்கூடிய சாலையில், பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இங்கு புலி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அதோடு, சில நேரங்களில் வன விலங்குகள் சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அப்பகுதியைக் கடந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் படுகாயங்களுடன் யானை குட்டி ஒன்று சாலை ஓரம் இறந்து கிடந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், யானைக் குட்டிக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆனால் தாய் யானை யாரையும் அருகில் விடவில்லை. இறந்த யானை குட்டியை விட்டுச் செல்ல மனம் இல்லாமல், அங்கேயே தாய் யானை பாசப் போராட்டம் நடத்தியது.
இதனால் நீலகிரியில் இருந்து மைசூர் செல்லக்கூடிய வாகனங்களும், மைசூரில் இருந்து நீலகிரி நோக்கி செல்லும் வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. யானையைக் கடந்து செல்லும் வாகனங்களை தாய் யானை தாக்க முயற்சித்தது. குட்டி யானையை புலி தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர், சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் தாய் யானையை விரட்டினர். தொடர்ந்து, குட்டி யானையின் உடலை அகற்றிய பின்னர், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 2024