கோயம்புத்தூர்: கோவை கொடிசியா அருகே உள்ள புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக நாளை (நவ.05) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகிறார்.
ஆகவே, முதலமைச்சர் வருகையை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, "கனரக வாகனங்கள் நாளை (நவ.05) மற்றும் நாளை மறுநாள் (நவ.06) ஆகிய இரண்டு நாட்களும் காலை 06.00 மணி முதல் இரவு 8 மணி வரை நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. இதர வணிக ரீதியிலான வாகனங்கள் அவிநாசி சாலையை தவிர்க்க வேண்டும். மேலும், நாளை (நவ.05) காலை 07.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை விரைவான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையை தவிர்ப்பது சிறந்தது.
நகருக்குள் வரும் வாகனங்கள்: நாளை (நவ.05) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நீலம்பூரிலிருந்து சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர், இராமநாதபுரம், சுங்கம் ரவுண்டானா, வெஸ்ட் கிளப் ரோடு, எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்லலாம்.
நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள்: கோவையிலிருந்து அவிநாசி சாலை வழியாக திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காந்திபுரத்திலிருந்து சத்தி ரோடு, கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, தொட்டிபாளையம் வழியாக நீலாம்பூர் பைபாஸ் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இதையும் படிங்க: தீபாவளி முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்: போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்!
திருச்சி சாலை: திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, கிளாசிக் டவர், அரசு மருத்துவமனை, கூட்ஸ் ஷெட் ரோடு, அவிநாசி ரோடு மேம்பாலம், புரூக்பாண்ட் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனூர் வழியாக மேற்கண்ட இடங்களுக்கு செல்லலாம். ஹோப் கல்லூரி, பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்கவும்.
சத்தி சாலை: சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்லலாம். அதேபோல, சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்