புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ராக்காத்தான்பட்டியைச் சேர்ந்தவர் மாமுண்டி சாந்தி தம்பதியினர். இவர்களின் மகனுக்கு இன்று காதணி விழா நடைபெற்றது. இந்த காதணி விழாவிற்கு தாய்மாமன்களான ராப்பூசல் பகுதியைச் சேர்ந்த பாரதி மற்றும் ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் செங்குட்டுவன் இருவரும் சேர்ந்து தங்களது சகோதரி மகன் காதணி விழாவை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு, பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அந்த வகையில், திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்விற்காக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கண்டெய்னர் லாரியில் ஏற்பாடு செய்திருந்த சீர் வரிசைகள் மேளதாளம் முழங்கக் கிளம்பின. அதில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், LED டிவி, வெண்கலம் மற்றும் சில்வர் பாத்திரங்கள், மா,பலா, வாழை என 30 வகையான பழங்கள், இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட சீர்வரிசைகள் இடம் பெற்றிருந்தன.
அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டு பசுங்கன்று, கிடாய்கள், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் என சென்ற ஊர்வலத்தில் வானவேடிக்கைகள், கொட்டு மேளங்கள் விண்ணை முட்டின. குறிப்பாக நடிகர் வடிவேல் கதாபாத்திர வேடமிட்டு ஒருவர் நடனம் என அரங்கம் மிகவும் பிரமாண்டமாக காணப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று தாய்மாமன்கள் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு காளைகளை சீர்வரிசையாக வழங்கினார்.
அப்போது, அவர்களின் சகோதரி தானும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க, தாய்மாமன்கள் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு யானையை நிற்க வைத்து வரவேற்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் காதணி விழா நடைபெற்றது. ஊரார் கண்டு வியக்கும்படி நடைபெற்ற இந்த காதணி விழாவில், ஏராளமானோர் வருகை புரிந்து காதணிச் செல்வியை மனதார வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "மன்னர் காலத்தில் தான் இதுபோன்று சீர்வரிசைகள் ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம். நமது பாரம்பரிய முறையும் அதுதான். அதை மறக்காமல் பழமை மாறாமல் தனது மருமகனின் காதணி விழாவிற்கு, ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் செங்குட்டுவன் சீர்வரிசைகளை எடுத்து வந்தது நமது பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தாய்மாமனும், ஜல்லிக்கட்டு வர்ணனையாளருமான செங்குட்டுவன், "எங்களது சகோதரியின் திருமணத்தின்போது, நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. ஆகையால் அவரின் மகனின் காதணி விழாவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என திட்டமிட்டு ஜல்லிக்கட்டு காளைகள், குதிரை, மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்து வந்தோம். பெண் பிள்ளைகள் பிறப்பதை தவறாக நினைக்கும் இந்த காலத்தில் பெண் பிள்ளைகளை வருங்காலத்தில் ஊக்குவிக்கும் விதமாக தமிழ் பாரம்பரிய கலாச்சாரம் முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்தது பெருமையாக உள்ளது" என தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர்களின் சகோதரி சாந்தி, "எனது சகோதரர்கள், அனைவரும் பெருமைப்படும்படி தனக்கு சீர்வரிசை கொண்டு வந்துள்ளனர்.எனது திருமணத்தின்போது பெரிதாக ஒன்றும் சீர்வரிசை செய்யவில்லை என்பதால் தற்போது அதிக சீர்வரிசை கொண்டு வந்துள்ளனர். சொல்ல முடியாத அளவிற்கு நான் மகிழ்ச்சியாக உள்ளேன்" என பூரிப்புடன் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்