தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுக தரப்பில், "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்", 'பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று (பிப்.18) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, "நாட்டைக் காக்கக்கூடிய போருக்கு தயாராகியுள்ளோம் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டை அடக்கும் முயற்சியாக ஜிஎஸ்டி (GST) இழப்பீட்டை நிறுத்தியதன் காரணமாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வராமல் உள்ளது.
200 தொகுதிகளில் வெற்றி; தன்னப்பிக்கையோடு இருங்கள்: நமது மாநில உரிமைகளைப் பறிகொடுப்பதற்கு அதிமுக கட்சியினர்தான் காரணம். பாசிச பாஜகவும் அதிமுகவும் ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டை சூறையாடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 160 தொகுதிகள்தான் வரும். மொத்தமாக, 200 தொகுதிகளில்தான் அவர்கள் வெல்ல முடியும். அதை மனதில் வைத்துக்கொண்டு நாம் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.
நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?: இவரைத்தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு எம்பி, "பெட்ரோல் விலையை குறைத்துக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பது குறித்து நான் பேசத் தயார், அதற்கு பதிலளிக்க நிர்மலா சீதாராமன் தாயாரா? அதேபோல், விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
அதனைக் கண்டித்து தான் விவசாயிகள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த பட்ஜெட்டில் வேளாண் மக்களுக்கு 2.67 சதவீதம் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன் அடிக்கல் நாட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தினர்.
செங்கலோடு வாக்கு சேகரிக்க உதயநிதி ஸ்டாலின் வருவார்: ஆனால், அந்த ஒற்றை செங்கல்லை வைத்ததோடு சரி, இன்றுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கிருந்த ஒற்றை செங்கல்லையும் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக கொண்டுபோய் காட்டி, அவரது தந்தை மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கினார். தற்போது, அதே கல்லை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்குக் கேட்க வருவார்.
சேது சமுத்திரம் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அந்தப் பகுதியில் மனிதனால் கட்டப்பட்ட பாலம் அங்கு இல்லை என தெரிவித்துள்ளது. இருப்பினும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் நிராகரித்து வருகின்றனர். இது அவர்கள் தமிழக மக்கள் மீது காட்டும் ஓரவஞ்சனை தான்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "செங்கோட்டையில் கழிப்பறை பிரச்சினை, பெண்கள் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர் நான்" - பிரதமர் மோடி!