கோயம்புத்தூர்: 2024 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த முடிவில் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கோவை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை திமுகவினர் பலரும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஆட்டுக்கறி பிரியாணியை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாமலையின் தோல்வி மற்றும் பாஜகவின் தோல்வியைக் கொண்டாடும் விதமாக ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைத்து கொண்டாடினர்.
இது குறித்து பேசிய தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதிலும் உள்ள சனாதனத்தை எதிர்த்து சமூக நீதியை ஆதரிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. ஆணவம் பிடித்த மோடி ஆட்சிக்கு கடிவாளம் அமைக்கின்ற வகையில் இந்திய மக்கள் அவர்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு வழங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 40க்கு 40 என மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள். இது சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் சங்பரிவார்களுக்கு எதிராக சமூக நீதியை ஆதரிக்கின்ற திராவிட மாடலுக்காக வழங்கியிருக்கும் தீர்ப்பாகும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் அண்ணாமலை தொடர்ந்து திராவிட இயக்கங்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பெரியார் அண்ணாவின் கொள்கைகளை இழிவு படுத்தி பேசி வருகின்ற நிலையில், அண்ணாமலை தன்னை IAS அதிகாரி ஆடு வளர்த்து பிழைத்துக் கொள்வோம் என்று கூறி ஆட்டை இழிவுபடுத்தும் வகையில் பேசி வந்ததாக தெரிவித்தார்.
மேலும், திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆட்டை நோகாமல் அறுக்க வேண்டும் என்று ஆட்டை வதம் செய்கின்ற தன்மையில் பேசி வந்ததாக குறிப்பிட்ட அவர், தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். தமிழகத்தில் அடைந்த படுதோல்வி I.N.D.I.A கூட்டணிக்கு திமுகவிற்கு 40க்கு 40 வழங்கி இருப்பதாக கூறினார். இந்நிலையில், அதனை கொண்டாடுகின்ற வகையில் ஆட்டுக்கறி பிரியாணியோடு இந்த விருந்தை நடத்தி வருவதாக” அவர் தெரிவித்தார்.