தருமபுரி: கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளாமானோர் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இன்று ஆபத்தை உணராமல் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்தனர். மேலும், அருவியில் பரிசலில் பயணம் செய்தனர்.
இரண்டு நாட்கள் விடுமுறையால் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நல்லாசிரியர் விருது பரிசுத்தொகையை பழங்குடியின பெண் குழந்தைகள் நலனுக்காக கொடுத்த கோபிநாத்!