கோயம்புத்தூர்: வால்பாறை சாலையில் உள்ள ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் கேரளாவில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாத்தலம் மிகவும் பிரபலமானதாகும். இங்கு தமிழ்நாடு, கேரளா ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். 40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இப்பகுதியில், கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "சொல்றத செய்யலனா இந்திகாரங்களை வேலைக்கு வைப்போம்" - தூய்மைப் பணியாளர்களின் குமுறல்
இந்நிலையில், கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு உட்பட்ட ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார், அவரது குடும்பத்தார் 13 பேருடன், சித்தூர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது வேனை வாடகைக்கு எடுத்து நேற்று வால்பாறை பகுதிக்கு சுற்றுலாக்கு வந்துள்ளனர். இதனையடுத்து, வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று விட்டு இன்று வால்பாறையில் இருந்து திரும்பியுள்ளனர்.
அப்போது, ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் புகுந்து கவிழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வாகனத்தில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிள்ளனர். இந்த விபத்து குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.