சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (பிப்.01) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளை (பிப்.2) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. பிப் 3ஆம் தேதியான நாளை மறுநாள், தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதைத் தொடர்ந்து, 7ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் 5 செ.மீ மழையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் 4 செ.மீ மழையும், சிவகாசி 3 செ.மீ மழையும், ராஜபாளையம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும், தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, கருப்பாநதி அணை பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை பகுதியில் 2 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணைப் பகுதியில் 2 செ.மீ மழையும், பேச்சிப்பாறை, புத்தன் அணை, சிற்றாறு-I பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை பதிவாகி உள்ளது. தஞ்சை, கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்ப நிலை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மறக்காம குடையை எடுத்துக்கோங்க.... தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!