சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மெதுவாக தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (டிச.13) தென் மாவட்டங்களில் அதி கனமழையும், வட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலர்ட்:
மயிலாடுதுறை மணல்மேடு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்:
Rainfall reports up to 0530 IST of date pic.twitter.com/VT8yFpEwxO
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 13, 2024
கடலூர், காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (டிச.13) வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தஞ்சாவூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தென்காசி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 12, 2024
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 22 அடியை எட்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்!
பள்ளிகளுக்கு விடுமுறை:
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், கனமழை காரணமாக கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், விருதுநகர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர், தருமபுரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து, மழை முன்னெச்சரிக்கையாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பிரஜ் கிஷோர் பிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.