சென்னை: விருகம்பாக்கத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இளம் பெண் தற்கொலை: சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெரு பகுதியை சேர்ந்தவர் தேவிப்பிரியா. இவர் தனது தாய் தந்தையுடன் கடந்த ஒரு வருடமாக அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு தனது அறைக்கு உறங்க சென்றவரை, இன்று காலை அவருடைய தாய் பத்மா கதவை திறந்து பார்க்கும் போது தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரேதத்தை கைப்பற்றி கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. தேவையில்லாத காரணங்களுக்காக வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரினாலோ, சாட்சிகளை கலைக்க முற்பட்டாலோ ஜாமீன் ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.
அத்துடன், வாரத்தில் திங்கள், வெள்ளி இரண்டு நாட்கள் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் அடிப்படையில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்றாவது முறையாக இன்று நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட்டார்.
24 சவரன் தங்க நகை கொள்ளை: சென்னை குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் போஸ்டல் நகர், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் மாலதி ராணி. இவர் பொத்தேரி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டில் பால அரவிந்த் என்பவர் மனைவியுடன் வாடகைக்கு தரை தளத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், மாலதி ராணி அடையாரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். வாடகைக்கு குடியிருந்த பால அரவிந்த் மனைவி மற்றும் உறவினர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க சென்றுள்ளார்.
இருவரும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாலதி ராணி வீட்டில் சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப் பட்டு அதிலிருந்து 8 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. அதேபோல வாடகைக்கு குடி இருந்த பால அரவிந்த் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 16 சவரன் தங்க நகைகளை அதே நபர் கொள்ளை அடித்துச் சென்றதும் தெரிந்தது.
உடனே இந்த சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போலீசார், தடய அறிவியல் நிபுணர்களை வரவைத்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெத்தபெட்டமைன் கடத்திய 5 நபர்கள் கைது: சென்னையில் பல்வேறு இடங்களில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
அதனை அடுத்து, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கே.கே. நகர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னையில் மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்வதற்காக பெங்களூரை சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து, மெத்தபெட்டமைன் வாங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு சென்று அருண், ரிஸ்வான் சாரக், பாஷா, சையது நூர், நித்தின் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் கார், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்