சென்னை: சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினர், இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது மது போதையில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், 48 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த அவரது கணவர், அந்த இளைஞரை பிடித்ததோடு, காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் மதுபோதையில் இருந்த அந்த இளைஞரை கைது செய்து ஓட்டேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் புளியந்தோப்பு குருசாமி நகரை சேர்ந்த ராகேஷ்(26) என்பதும், கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்
கத்திமுனையில் பணம் பறிப்பு: சென்னை, அரும்பாக்கம் வீதியம்மன் கோவில் தெருவில் நையினார் முகமது (40) என்பவர் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை மாளிகை கடைக்குக் குடிபோதையில் வந்த ரவுடி ஒருவர் கத்தியைக் காட்டி மாமூல் கேட்டுள்ளார்.
நையினார் முகமது பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி உடனே கடைக்குள் புகுந்து அவரை தாக்கி விட்டு, கல்லாப் பெட்டியிலிருந்த 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட மளிகைக் கடை உரிமையாளர், இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரவுடி அடையாளம் கண்டு பிடித்து கைது செய்தனர். கைதான நபர் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மணிகண்டன் (27) என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.
கஞ்சா பறிமுதல்: கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சாப் (21). இவர் ஒடிசா மாநிலம் பேக்ராம்பூர் எனும் இடத்திலிருந்து கஞ்சாவை வாங்கி அதனை கேரளா மாநிலத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அடையாறு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படியான நபர் ஒருவர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார்.
அவரை பிடித்து சோதனை செய்ததில், அவருடைய பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அன்சாப் என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் பழமையான காண்டாமிருக கொம்பினை விற்க முயற்சி.. 5 பேர் கைது!