சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் தற்போது நடைபெற்று வரும் காலாண்டுத் தேர்வு நாளையுடன் நிறைவடையும் நிலையில், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி, ஆசிரியர் சங்கம் சார்பில் காலாண்டு தேர்வு விடுமுறையை ஒன்பது நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிகையை முன்வைத்து பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வந்த நிலையில், தற்போது கோரிக்கையை ஏற்ற பள்ளிக்கல்வித் துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டித்து மீண்டும் அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், காலாண்டு விடுமுறை நாட்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என எந்த பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டு, அதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருக்குறள் சொன்னா சர்பத் இலவசம்! பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்டும் ஜூஸ் கடை!
அதில், "2024-25ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது.
மேலும், அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளித் திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு திருத்திய விடைத்தாள்களை வழங்கவும் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்