சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மைத் தேர்விற்கான புதிய பாடத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் செயலாளர் கோபால சுந்தர ராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வின் கால அட்டவணை கடந்த மாதம் 24.04.2024 அன்று வெளியிடப்பட்டது. அப்போது, தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் தேர்வு 2A-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ன் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2Aன் முதன்மைத் தேர்விற்கான புதிய பாடத்திட்டமும் https://www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும், தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் 2 புதிய பாடத்திட்டம்: குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், தமிழ் தகுதி தாள் மற்றும் பொது அறிவு தாள் ஆகியவற்றை விரிவாக விடையளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
குரூப் 2ஏ புதிய பாடத்திட்டம்: குரூப் 2A முதன்மைத் தேர்வை பொறுத்தவரையில், தமிழ் தகுதி தாள் விரிவாக விடை அளிக்கும் வகையிலும் மற்றும் பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையைத் தேர்வு செய்யும் வகையிலும் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது.
பொது அறிவு தாள்: குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மைத் தேர்வுக்கான பொது அறிவு தாளில், 50 சதவீத வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவீத வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்கும், 30 சதவீத வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமில் சார்ந்து இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2,300 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A-க்கான தேர்வு அறிவிப்பு ஜூன் 28ஆம் தேதி வெளியிடப்பட உள்ள சூழலில், தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கமகம பிரியாணி விருந்து.. நெற்குன்றம் கவுன்சிலர் அசத்தல்!