சென்னை: 'தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்’ அமைக்கப்படும் என நேற்று (பிப்.22) சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் ( திருத்த) சட்டமுன்வடிவு பேரவையில் நிறைவேறியது.
இந்தச் சட்ட முன் வடிவு பேரவையில் முன்வைக்கப்பட்டபோது பாமக உறுப்பினர் ஜி.கே.மணி மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைக்கும் நோக்கில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் "மாநில நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு , கட்டுமானம் குறித்து மேற்பார்வை இடவே மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 மீட்டர் சாலைகளை 10 மீட்டர் ஆக்கி மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கின்றது.
தமிழகத்தில் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நெடுஞ்சாலைகளில் பாலம் , புறவழிச் சாலை அமைப்பது குறித்து தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில அரசின் நிதிநிலையால் ஈடுகொடுக்க முடியாத அளவு பல கோரிக்கைகள் இருக்கின்றன.
மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மூத்த ias அதிகாரி தலைவராக நியமனம் செய்யப்படுவார். இந்த ஆணையம் மூலம் சாலை பராமரிப்புக்கு மாநில அரசின் நிதியைப் பயன்படுத்துவோம். தற்போது உலக வங்கி , ஜப்பான் வங்கிகளில் கடன் பெற்று சாலைப் பணிகளை மேற்கொள்ளக் காலதாமதம் ஆகிறது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைவதன் மூலம் சுறுசுறுப்பாக மக்கள் தேவையை அறிந்து விரைந்து பணியை மேற்கொள்ள முடியும். மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடி அமைப்பது குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது. ஆணையம் அமைந்த பிறகு அதன் மூலமாகவே சுங்கச் சாவடி அமைப்பது குறித்து முடிவு செய்ய முடியும்.
மாநில அரசு நெடுஞ்சாலை ஆணையத்தை அமைத்தால் மட்டுமே நெடுஞ்சாலைத்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். மாநில அரசின் வசம் உள்ள நிதியைப் பயன்படுத்தி மாநிலத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அமைந்த பிறகு 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கலாமா அல்லது 50 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கலாமா என மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து அதுகுறித்த முடிவு செய்யப்படும்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் பிப்.26இல் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!