சென்னை: பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வில் கலந்துக் கொள்ள விண்ணப்பம் செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டு, மே 25ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், தற்பொழுது பணிபுரியும் பள்ளியில் ஒராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் வேறு இடங்களுக்கு செல்வதற்கு 13ஆம்தேதி முதல் 17ஆம் தேதி வரை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பித்திடல் வேண்டும். பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பித்திடல் வேண்டும்.
ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும். அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும் தொடக்கக் கல்வித்துறையில் 26 ஆயிரத்து 75 ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் 37358 ஆசிரியர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதேபோல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தாெடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளதை காண முடிகிறது. இடையில் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது கல்வித் தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட்டிருந்தது.
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்களிடம் இருந்து மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை வரபெற்றது. அதனை ஏற்று பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் கால அளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து மே 25ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தற்பொழுது பணிபுரியும் பள்ளியில் ஒராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் 200க்கு 113 கேள்விகள் அரசு நடத்திய பயிற்சி தேர்வில் கேட்கப்பட்டவை - ஆசிரியர்கள் பெருமிதம்! - NEET EXAM RESULT 2024