சென்னை: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை(பிப்.27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகையன் மற்றும் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மத்தியச் செயற்குழுக் கூட்ட முடிவுகளின்படி நாளை (பிப்.27) முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை, 14,000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசிற்கும், உயர் அலுவலர்களுக்கும் ஏற்கனவே தீர்மானங்கள் அளிக்கப்பட்டுள்ள போதும், இதுவரை கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போராட்டங்களின் காரணமாக, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், பொது மக்களுக்கான சேவைகள் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் பாதிப்படைந்துள்ளது.
கடந்த 2023 மே மாதம், முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் மீது சுமுகத் தீர்வு காணப்பட்டது.
ஆனால் கடந்த 10 மாதங்களாக இந்த முடிவுகளின்படி ஆணைகள் வழங்கக் காலதாமதம் செய்யப்படுவதே இப்போராட்டத்திற்கான முக்கிய காரணம் ஆகும். முதலமைச்சர் கோரிக்கைகளை ஏற்று ஆணையிட்ட பின்பும், சில உயர் அலுவலர்கள் ஆணைகள் வழங்கக் காலதாமதம் செய்வது அலுவலர்கள் மத்தியில் பெரும்
அதிருப்தியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களைக் கடந்த மே-2023 மாதமே நிரப்பிட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்த பின்பும், காலதாமதம் செய்வது விந்தையாக உள்ளது. பொது மக்களின் உயிரைக் காக்கின்ற பேரிடர் மேலாண்மைப் பிரிவில் உள்ள சொற்பப் பணியிடங்களையும் கடந்த மார்ச்-2023ல் நிதித்துறையால் கலைக்கப்பட்டதை மீண்டும் ஏற்படுத்தக் கோரியது ஏற்கப்பட்டுக் கடந்த 10 மாதங்களாக உதாசினம் செய்யப்படுகிறது.
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான செலவினங்கள், சங்கத்தின் தொடர் போராட்டங்களுக்குப் பின்பாக இரண்டு ஆண்டுகள் தாமதமாக வழங்கப்பட்ட நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு முன்னதாகவே வழங்கிட வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆண்டிற்கு 1 கோடி சான்றிதழ்களை இணையவழியில் வழங்கும் நிலையில், அரசாணையின்படி, வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர் (சான்றிதழ்) பணியிடங்கள் வழங்க மறுக்கப்படுகிறது. முதலமைச்சரின் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" சிறப்புத் திட்டத்திற்கு ஒரு முகாமிற்கு ரூ.1 இலட்சம் செலவுகள் ஆகும் நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு, கால அவகாசம் வழங்காததால், கள அலுவலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது, கூட முக்கிய கோரிக்கைகளை அரசு உரிய காலத்தில் செய்திருந்தால், வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். எனவே, மக்களின் அனைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அரசின் முக்கியத் திட்டங்களை நிறைவேற்றும் வருவாய்த்துறை அலுவலர்களின் முக்கிய கோரிக்கைகளைக் காலதாமதமின்றி நிறைவேற்ற முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்; ஃபிளக்ஸ் போர்டு வைத்துள்ள இஸ்லாமிய அமைப்பினர்.. காரணம் என்ன?