சென்னை: தமிழ்நாட்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கடலோட மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய வெப்ப அலையால், மக்கள் அதிகளவு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் வெயில் பரவலாகவே சதம் அடித்து வந்தது. இதனால், மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதுமட்டுமின்றி, பல்வேறு இடங்களில் மக்களின் அன்றாட வேலைகள் முடங்கியது.
இந்த நிலையில், வெயிலின் சூட்டைத் தணிக்கும் விதமாக கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும் (மே 8), நாளையும் (மே 9) தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் என மொத்தம் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், இன்று அதிகாலை முதலே சென்னையில் உள்ள அடையாறு, வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. மேலும், கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.
இன்று, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும்; நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழையும்; நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) முதல் 11ஆம் தேதி (சனிக்கிழமை) வரை தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் எனவும், நாளை (வியாழக்கிழமை) முதல் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை 4 டிகிரி வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்குள்:
- ஆற்காடு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
- கிண்டி, கலவை, மாம்பலம், வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
- ஆற்காடு, வாலாஜாபேட்டை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
- மதுரவாயல்,அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
- பொன்னேரி, ஊத்துக்கோட்டை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
- கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
- வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
இடி மின்னலுடன் கூடிய மழை: இன்று தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் அதிரடி வீண்... ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது டெல்லி கேபிடல்ஸ்!