சென்னை: '6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்-2023' போட்டி தமிழ்நாட்டில் கடந்த ஜன.19 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் போட்டிகள் அனைத்தும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் 36 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட 5ஆயிரத்து 500 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும் இப்போட்டியில் பயிற்சியாளர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் ஈடுபடுத்தப்பட்டனர். தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும், ஆயிரத்து 600 - க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுவர்கள், ஆயிரத்டு 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைநின்றனர்.
இந்த 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல்' முதல்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக (DEMO Sports) இடம் பெற்றன என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (ஜன.31) கேலோ இந்தியா போட்டி முடிவடைந்தையொட்டி, மஹாராஸ்டரா மாநிலம் 150 பதக்கங்கள் பெற்று முதலிடத்திலும், தமிழ்நாடு 98 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், 103 பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கேலோ இந்தியாவில் வரலாறு படைத்த தமிழ்நாடு: தமிழ்நாட்டில் இருந்து 266 சிறுவர்கள் மற்றும் 256 சிறுமிகள் கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு 38 தங்கப் பதக்கம், 21 வெள்ளி பதக்கம், 39 வெண்கலம் பதக்கம் என 98 பதக்கங்களுடன் கேலோ வரலாற்றில் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை கேலோ போட்டிகளில் 8-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு இம்முறை 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
கேலோ விளையாட்டில் ஜொலித்த தமிழர்கள்: இந்நிலையில், தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு சார்பில் 522 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, வில்வித்தை போட்டி(4), தடகள போட்டி (47), பூப்பந்து(6), கூடைப்பந்து(24), குத்துச்சண்டை(20), கால்பந்து(40), ஜிம்னாஸ்டிக்ஸ்(17), ஹாக்கி(36), ஜூடோ(14), கபடி(24), கோ-கோ(30) துப்பாக்கிச் சூடுதல்(16), நீச்சல்(34), கைப்பந்து (28), பளு தூக்குதல்(27), மல்யுத்தம்(21), டேபிள் டென்னிஸ்(8), டென்னிஸ்(6), சைக்கிள் ஓட்டுதல்(22), ஃபென்சிங்(34), தாங் தா(8), மல்லாகம்ப்(12), கட்கா(10), களரிப்பயட்டு(12), யோகாசனம்(12), ஸ்குவாஷ்(10) போன்ற 26 பிரிவிகளில் 522 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு!