சென்னை: உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,104 பணியிடங்களை நிரப்புவதற்கு நகராட்சி நிர்வாகத்துறை விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வினை அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு மையம் தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 149 மையங்களில் நடத்தவுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2,104 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 880 பேர் போட்டியிடுகின்றனர். பட்டயப்படிப்பு நிலையில் உள்ள பணியிடங்களுக்கு வரும் ஜூன் 29ஆம் தேதி (நாளை) நடைபெறும் தேர்வினை 1 லட்சத்து ஆயிரத்து 85 பேரும், பட்டப்படிப்பு நிலையில் உள்ள பணிகளுக்கு ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் தேர்வினை 99 ஆயிரத்து 283 பேரும் காலை மற்றும் மாலை வேளைகளில் எழுத உள்ளனர்.
அதேபோல், நகர்ப்புற திட்டமிடல் அலுவலர் பணிக்கு ஜூலை 6ஆம் தேதி காலையில் நடைபெறும் தேர்வினை 512 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- தேர்வின் போது ஹால் டிக்கெட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கலர் பாஸ்போர்ட் புகைப்படத்தை ஒட்டி, அந்தந்த தேர்வு மையத்தில் அளிக்க வேண்டும்.
- தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் OMR விடைத்தாளில் கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் அல்லது புகைப்பட நகலையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
- மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. விண்ணப்பதாரர் செல்போன் வைத்திருப்பதை தேர்வு கண்காணிப்பாளர் கண்டறிந்தால், செல்போன் சுவிட்ஆஃப் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அந்த குறிப்பிட்ட நபர் தேர்வு எழுதியது செல்லாது.
- தேர்வு அறையில் எந்தவொரு ஸ்மார்ட் அல்லது எலக்ட்ரிக் சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. தேர்வு அறை கண்காணிப்பாளர் ஸ்மார்ட் அல்லது எலக்ட்ரிக் சாதனங்கள் வைத்திருப்பதைக் கண்டறிந்தால், அவரது தேர்வும் செல்லாது.
- தேர்வுகள் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் தேர்வு நடைபெறும் இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை தவிர வேறு இடங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்விற்கான விதிமுறைகளையும் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களின் பாதுகாப்பு; இந்து அறநிலையத்துறைக்கு முக்கிய உத்தரவு! - Temples farming land