சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை எனவும் மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என வலியுறுத்துவோம் என்றும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தப்போது 2016 ஆம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு வரவில்லை. நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து ஆய்வு குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வில் குழப்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
2021 ஆம் ஆண்டு இரண்டு மாணவர்களும், கடந்த ஆண்டு ஒரு மாணவரும் தான் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 67 பேர் முழு முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சில மாணவர்கள் சாத்தியமில்லாத வகையில் 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் மதிப்பெண்கள் வழங்கியதில் குளறுபடிகள் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் 2018 இல் வந்த தீர்ப்பின்படி கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் எந்த விதத்திலும் நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படலாம் என்று நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.
கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு விரும்பினால் மறுதேர்வு நடத்தலாம் என்று தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. அப்படியானால் தேர்வு முடிவுகளை மீண்டும் வெளியிட வேண்டும்.
அப்போது கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்ணும், இந்த ஆண்டு கட் ஆப் மதிபெண்ணும் வேறுபடும்.
ஓருமுறை தேர்வு எழுதியவர்களில் 31 சதவீதம் பேர்தான் நீட் தேர்வுக்குபின் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். மற்றவர்கள் ஒன்றும் மேற்பட்ட முறை முயன்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கருணை மதிப்பெண்கள் வழங்க கூட மத்திய அரசு மாநிலங்களுக்கு தகுதி வைத்துள்ளது. கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தான் அதிகம் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மறு தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்ட 1,563 மாணவர்களில் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை.
ஹரியானா மாநிலத்தில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 8 பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது எப்படி சாத்தியம்; எங்கு தவறு நடந்துள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் கருணை மதிப்பெண் ரத்து; 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!