சென்னை: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் பதவி உயர்வு மற்றும் பண பலனை அளிக்கக்கூடிய 2009ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அரசாணை 354 ஐ மறு வரையறை செய்து GO 354 யை அமல்படுத்த வேண்டும்.
ஊக்க ஊதியம்: அரசு மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை, அரசாணை 2-ன் படி பொது சுகாதாரத்துறையின் ஒரு சில மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் அனைத்து மருத்துவ அலுவலர்களுக்கும், அறிவிக்கப்பட்ட அதே தேதியிலிருந்து ஊக்க ஊதியம் allowance வழங்கப்பட வேண்டும்.
கரோனா கால ஊக்கத்தொகை: கரோனா காலத்தில் பணி புரிந்த அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்ட நிலையில், திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் மட்டும் ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. கரோனா காலத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உடனடியாக ஊக்கத்தொகை அரசு அறிவித்தபடி வழங்கப்பட வேண்டும். திருநெல்வேலி சுகாதார அலுவலர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவி உயர்வு: பொது சுகாதாரத்துறையில் மருத்துவ அலுவலர்களாக பணியில் சேரும் மருத்துவர்கள் பணிஓய்வு வரை எந்தவித பதவி உயர்வும் இல்லாமல் அதே மருத்துவ அலுவலர் நிலையிலேயே பணி ஓய்வு பெறுகின்றனர். இது அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது. ஆகவே, பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத்துறையில் காலம் சார்ந்த பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டு, 4 ஆண்டுகள் பணிநிறைவு செய்த மருத்துவ அலுவலர்களை பணிமூப்பு அடிப்படையில் சுகாதார அலுவலர்களாக (Health Officers) பணிநியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: "6 ஆண்டுகளாக காலியாக உள்ள தேர்வாணையர் பதவி" - பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புகார்!
சர்வீஸ் மருத்துவர்கள் பட்டமேற்படிப்பு படிப்பதற்கு மிகவும் பாதகமாக இருக்கும் GO 151 தற்காலிக நிறுத்திவைப்பு என்ற நிலையில் இல்லாமல் முற்றிலும் கைவிட்டு, அனைத்து ஸ்பெஷலிட்டி பட்டமேற்படிப்புகள் (MD/MS/ Post Graduate Diploma) படிக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும். NQAS தர நிர்ணயத்துக்கு (Assessment) முறையாக நிதிஒதுக்கீடு செய்யாமல், மருத்துவ அலுவலர்கள் சொந்தக்காசு போட்டு நடத்த நிர்பந்தம் செய்வதை கைவிடல் வேண்டும்.
மாதாந்திர திறனாய்வுக் கூட்டம்: ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ வாகனம் உள்ளிட்டவை சம்பந்தமாக நடத்தப்படும் மாதாந்திர திறனாய்வுக் கூட்டங்களை இரவு 7,8 மணி வரை இழுத்தடிக்காமல் மாலை 4 மணிக்குள் முடித்திடல் வேண்டும். பெண்மருத்துவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வகையில் மாலை 4 மணிக்கு மேல் எந்தவொரு திறனாய்வுக்கூட்டமும் நடத்தக்கூடாது. 4 மணிக்கு மேல் கூட்டம் நடத்தும் பட்சத்தில் தனி ஊக்கத்தொகை மற்றும் பெண்மருத்துவர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
நிலுவையில் உள்ள மருத்துவ அலுவலர்களின் பணி வரன்முறை (regularisation and probation) கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப் பட்டு, அனைத்து மருத்துவ அலுவலர்களுக்கும் அவர்களுக்கான பணப்பலன்கள் தடையின்றி பெற்றுத்தர உடனடியாக ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே பணி அறிக்கை, வாரந்திர பணி அறிக்கை, மாதந்திர பணி அறிக்கை, வட்டார அளவில் ஆய்வு, மாவட்ட சுகாதார அலுவலர் ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசு மருத்துவ அலுவலர்களுக்கு, performance appraisal for medical officers கேட்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக கைவிட வேண்டும்.
புதிய நியமனம்: பொது சுகாதாரத்துறையில் நிலவும் அனைத்து வகை ஆள் பற்றாக்குறையும் சரி செய்ய உடனடியாக புதிய நியமனங்களுக்கு ஆவண செய்ய வேண்டும். கரோனா, டெங்கு, புயல், வெள்ளம், கூடுதல் பணி, இதர பெரும்தொற்றுகள் ஏற்படும் காலங்களில் மருத்துவ நிவாரணப்பணிகள் செய்யும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
ஏற்கனவே ஆள் பற்றாக்குறை நிலவும் சூழலில் PICME 3.0 மற்றும் HMIS 2.0 என்ற பெயரில் ஏற்கனவே உள்ள புள்ளி விவரங்களை சேகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மருத்துவர் மற்றும் பயனாளிகள் நலன் கருதி அவர்களது தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் மருத்துவர் அறையில் கேமரா பொறுத்தி கண்காணிக்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்