வேலூர்: பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து நேற்று(மார்ச் 06) ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் குழுவின் உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு தொகுதி), எம்.கே.மோகன் (அண்ணாநகர் தொகுதி) ஆகியோரும் பங்கேற்றனர்.
ஆய்வின்போது பெரும்பாலான இடங்களில் புதிதாகக் கட்டப்படும், புதுப்பிக்கக்பட்டு வரும் கட்டடங்களின் தரம் குறித்து உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேல்முருகன் பயனாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, சட்டப்பேரவை இணைச்செயலர் கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் கூறுகையில்,"தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிமொழி குழு வேலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் களவு ஆய்வு செய்தோம். 197 கோடியில் கட்டப்பட்டு வரும் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அரசு அருங்காட்சியகம் விரிவாக்கம், அப்துல்லாபுரம் தகவல் தொழில்நுட்ப பூங்கா, திருவள்ளூவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதி கட்டடம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சத்துவாச்சாரியில் அமைக்கப்பட்டு வரும் 9 அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தோம்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடித்திட அறிவுரை வழங்கியுள்ளோம். பேரவைக்கு அளிக்கப்பட்ட 83 உறுதிமொழிகளில் 23 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு 57 நிலுவையில் உள்ளது. மேலும் பழைய உறுதிமொழிகள் 66 நிலுவையில் உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இம்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 2021 - 2023 வரையில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் விரிசல் ஏற்பட்டது. அதனைச் சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பணிகளைச் சரியாக மேற்கொள்ளவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளோம் என்றார்.
மேலும், டைடில் பார்க் கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் 3 கோடி பணியை மட்டும் செய்துவிட்டு அதிலிருந்து விலகிவிட்டார். வேறு ஒரு ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இன்னும் 6 மாத காலத்திற்குள் பணி முடிக்கப்படும் என டைட்டில் பார்க் மண்டல மேலாளர் குழுவுக்குச் சாட்சியம் அளித்துள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை அதனை விஜிலென்ஸ் அமைப்பு தான் விசாரிக்க வேண்டும். மேலும் திருவள்ளுவர் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தைப் பட்டா நிலமாக உள்ளது. அங்குச் செல்ல சாலை அமைக்கவும் அதனைப் பரிசீலிக்கவும் ஆட்சியருக்குக் கூறியுள்ளோம் ஆட்சியரும் அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவித்துள்ளார்" என கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் 2015; விருது பெற்றபின் ஜோதிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!