சென்னை: 1969ஆம் ஆண்டு முதல் நந்தனம் அரசு கல்லூரி, ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் இருபாலர் பயிலக்கூடிய வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, கல்லூரி தொடங்கப்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த காலங்களில் நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
மேலும், நந்தனம் கலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்து வந்ததால், காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதேநேரம், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ஏற்கனவே முதுகலை பாடப் பிரிவில் மாணவிகள் பயிலலாம் என்ற விதிமுறை இருப்பதால், அதிக எண்ணிக்கையில் மாணவிகள் முதுகலை பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
இதனையடுத்து, இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தற்போது வரும் கல்வியாண்டு முதல் மாணவிகள் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே இருந்த அரசு நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி என்ற பெயர் மாற்றப்பட்டு, இனி நந்தனம் அரசு கலைக் கல்லூரி என அழைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ பணி: ஓட்டேரி வந்தடைந்த 'ஆனைமலை' இயந்திரம்! - CHENNAI METRO CONSTRUCTION UPDATE