சென்னை: காவல் நிலையங்களில் அத்துமீறல்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன் அந்தப் பதிவுகளை பத்திரப்படுத்துவதற்காக உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் திருத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,500க்கு மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீத காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் முறையாக பத்திரப்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.