சென்னை: கடந்த டிசம்பர் 26ஆம் தேதி எண்ணூரில் செயல்பட்டு வரும் கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சனை, தோல் அரிப்பு, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
அது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஆர்.கண்ணன், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த பி.எம்.பூர்ணிமா, ஐஐடி பேராசிரியர் சங்கர் நரசிம்மன், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி எஸ்.வி.சீனிவாசன் உட்பட ஏழு பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அரசு அமைத்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த தொழில்நுட்பக் குழு அவர்களது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடலுக்கு அடியில் அம்மோனியா கொண்டு செல்லும் குழாயிலிருந்து, அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதை உறுதி செய்தது.
மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக குழாயை சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் நகர்ந்ததால், குழாயில் சேதம் ஏற்பட்டு, அம்மோனியா வாயுகசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்த குழுவால் கணிக்கப்பட்டது. இது தொடர்பாக, அரசு செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும் எனவும், கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொதுமக்கள் யாரும் அணுகா வகையில் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், முன் குளிரூட்டுதல் (Pre-Cooling) மற்றும் அம்மோனியா வாயுவினை திரவ நிலையில் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கொண்டு வர பயன்படும் குழாயின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்காக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி, அழுத்தச் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், குழாய் அமைப்பின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே, அக்குழாயின் வழியே அம்மோனியா செலுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.
அம்மோனியா கசிவு ஏற்பட்டால் ஆலையை சுற்றியுள்ள கிராம பொது மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில், தொழிற்சாலையின் அனைத்து திசைகளிலும் மற்றும் கடற்கரையிலிருந்து சாலை வழியாக ஆலைக்கு செல்லும் குழாய்களில் சென்சார்கள் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த அவசர தயார்நிலை அறிக்கையை (Emergency Preparedness Plan) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதை தவிர்த்து எரிக்கப்படுவது (flare) உறுதி செய்யப்பட வேண்டும். அம்மோனியா வாயுக் கசிவின் தாக்கத்தை குறைக்க, அம்மோனியா செல்லும் குழாய்களில் தானியங்கி நீர் தெளிப்பான்கள் (Automated Water Curtain) அமைக்கப்பட வேண்டும், மற்றும் அம்மோனியா வாயு குழாயில் கசிவு ஏற்படும்போது உடனடியாக அதன் செயல்பாட்டினை நிறுத்துவதற்கான தானியங்கி கருவிகள் (Automated Tripping System) நிறுவப்பட வேண்டும் உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இந்த குழு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக 5.92 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பக் குழுவினர் மேற்கண்ட அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டு தொழில்நுட்பக் குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கண்டா வரச் சொல்லுங்க' வைரலாகும் போஸ்டர் யாரை வரவேற்க..தெரியுமா?