சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் நான்காம் நாளான நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனிடையே, சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொள்கை விளக்க குறிப்பில், 'வானிலையை மிகச் சரியாக கணித்து உரிய முன்னெச்சரிக்கையை பேரிடர் நிகழ்வுக்கு முன்னரே வழங்கும் வகையில் 2C - band Doppler ரேடார்களை 56.03 கோடியில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாக' அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.32.48 கோடியில் 1400 தானியங்கி மழைமானிகள்: இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், வானிலை முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுசட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்க ரூ.32.48 கோடிக்கு அரசால் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் அணைகளில் நீர்வரத்தை கணிக்கலாம்: இத்தானியங்கி மழைமானிகள் மற்றும் வானிலை மையங்கள். ஜீலை 2024-க்குள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நிகழ்நேர மழை விவரங்கள் அறிந்து, உரிய நேரத்தில் வானிலை முன்னெச்சரிக்கைகளை வழங்க இயலும். மேலும், மழைப்பொழிவு விவரத்தை கொண்டு அதன் அடிப்படையில், அணைகளில் நீர்வரத்தைக் கணக்கிடுவதன் மூலம், அணையின் நீர் இருப்பினை மேலாண்மை செய்ய உதவிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் சேதங்கள் தடுக்க இயலும்: கனமழையின் காரணமாக ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து துல்லியமாக கணிக்க முடியும். மேலும், வடிநிலப்பகுதிகள், வேளாண் காலநிலை பகுதிகள் மற்றும் பயனாளர் வரையறுக்கும் பகுதிகளுக்கான பதிவான மழையளவு உள்ளிட்ட காலநிலை புள்ளி விவரங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் அறிய இயலும் என குறிப்பிட்டுள்ளது.
ரூ.56.3 கோடி நிதிக்கு ஒப்புதல்: சட்டமன்றப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வானிலையை மிகச் சரியாக கணித்து உரிய முன்னெச்சரிக்கையினை பேரிடர் நிகழ்விற்கு முன்னரே வழங்கும் வகையில் ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் 2 ரேடார்கள் (C-Band Doppler) அமைக்க ரூ.56.3 கோடி நிதி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ரேடார்களை கொள்முதல் செய்வதற்கான பணி நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அதிவேக கணினி வசதியைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமான வானிலை முன்னறிவிப்பை உருவாக்க அம்மையத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மின்னல் பற்றிய எச்சரிக்கை: மேலும், பொதுமக்களுக்கு மின்னல் குறித்த எச்சரிக்கைகளை தேவைப்படும் பகுதிகளில் முன்கூட்டியே வழங்குவதற்கு ஏதுவாக, மின்னல் தொடர்பான தரவுகளைப் பெறுவதற்கு புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக' அந்த கொள்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் பெய்யக்கூடிய பெருமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், வானிலையை மிகச் சரியாக கணித்து உரிய முன்னெச்சரிக்கையை வழங்கக் கூடியவகையில் ரேடார்கள் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ஆண்களுக்கும் பாதுகாப்பு: எம்எல்ஏவின் கோரிக்கையால் அவையில் சிரிப்பலை! - TN ASSEMBLY SESSION 2024