சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இந்த நிலையில், நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பினார்.
இதனையடுத்து, அவரது ராஜினாமா தொடர்பான கடிதம் ஆளுநருக்கு முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. முந்தைய ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத் செயலில் ஈடுபட்டதாக, இவருக்கு சொந்தமான அரசு பங்களா வீடு, அலுவலகங்கள் மற்றும் கரூரில் நான்கு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி 18 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
அதன்பின், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தி நீதிமன்றக் காவலில் அவரை அடைத்தனர். தற்போது புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் அடிக்கடி மனுத் தாக்கல் செய்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு முறையும் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் 19வது முறையாக, பிப்.15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கடந்த பிப்.8ஆம் தேதி கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பெற்றோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!