சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை, இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதும் தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட (Science Practical Examinations) செய்முறை தேர்வுகள் வரும் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வெழுதிட வேண்டும்.
அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்குக் கிடைக்கப் பெறாதவர்கள். இவ்வறிவிக்கையைத் தெரிந்துகொண்டு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நீதிபதி பதவிக்காலம் முடிந்த பின் தீர்ப்பு வழங்குவது முறையற்ற செயல் - சுப்ரீம் கோர்ட் கண்டனம்