கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயன், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர், கரூர் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, கரூரில் நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்திடுமாறு மனு அளித்தனர்.
அதில், காவிரி ஆற்றில் ஓட்டுக்காக மணல் திருட்டு நடப்பதை தடுக்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத வெடி மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்திட வேண்டும், கரூர் மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரி கிரசர் எம் சாண்ட் நிறுவனங்கள், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி (GST) செலுத்தாமல் இருப்பதால், பதுக்கப்படும் கருப்பு பணத்தை மீட்டெடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி இருந்தது.
அந்த மனுவினை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரில் வழங்கிய பின்னர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அதில், "எந்த ஒரு இடத்திலும், பரிசுப் பொருட்களோ அல்லது வேற எந்த விதமான சலுகைகளோ வாக்காளர்களுக்கு தரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
ஆனால், காவிரி ஆறு மற்றும் அமராவதி ஆறு ஓடுகின்ற பகுதிகளில், தினசரி நூறு முதல் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் விஎஸ் 50 வண்டிகளில், ஓட்டுக்கு லஞ்சமாக திருட்டுத்தனமாக மணல் எடுக்க அனுமதித்து வருகிறார்கள். இதுகுறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது கரூர் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.
நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரிகளை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் ஆனந்த் என்ற ஒரு நபர், நேரடியாக அழைத்து மிரட்டி அச்சுறுத்துகிறார். எனவே, ஓட்டுக்காக மாட்டு வண்டிகளில் திருட்டு மணல் எடுக்க அனுமதிக்கும் நடைமுறையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே, கரூர் மாவட்டத்தில் நன்னியூர் மற்றும் மல்லம்பாளையம் இடங்களில் மணல் எடுக்க அனுமதி வாங்கிவிட்டு, சட்ட விரோதமாக 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு மணல் எடுக்க அனுமதித்த முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தற்போது அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வருகிறார். அப்படியிருக்க, தேர்தல் நடக்கின்ற காலத்திலும், கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் இதுபோன்று ஓட்டுக்கு லஞ்சமாக மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்கும் வழிமுறையை தடுக்காமல் இருக்கிறார்.
குறிப்பாக, லாலாபேட்டை, கட்டளை, வாங்கல், செவ்வந்திபாளையம், தவிட்டுப்பாளையம் மற்றும் கடம்பங்குறிச்சி, நெரூர், குளித்தலை போன்ற பகுதிகளிலும், அமராவதி ஆற்றின் அனைத்து பகுதிகளிலும், இவ்வாறு சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது நடந்து கொண்டிருக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் ஓட்டுக்காக திருட்டுத்தனமாக மணல் அள்ள அனுமதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல, கரூர் மாவட்டத்தில் தான் கடந்த காலத்தில் ஆம்புலன்ஸ் வைத்து, பல நூறு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகிக்க, சட்ட விரோதமாக கடத்தப்பட்டது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் கண்டைனர் லாரிகளில் 500 கோடி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இங்கே உள்ள அரசியல் கட்சிகள், ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, எம் சாண்ட் கொண்டு செல்லக்கூடிய டிப்பர் லாரிகளில் பணத்தை வைத்து கடத்திக் கொண்டு செல்கிறார்கள்.
ஆனால், தேர்தல் ஆணையம் அமைத்துள்ள பறக்கும் படை அதிகாரிகள், பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்கிறார்களே தவிர, டிப்பர் லாரிகளில் எவ்வித ஆய்வும் செய்யாமல், திட்டமிட்டு அதனை அனுமதித்து வருகிறார்கள். இதன் மூலம், பல நூறு கோடி ரூபாய் பணம் சட்ட விரோதமாக கரூர் மாவட்டத்திலிருந்து பல மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனவே, அனைத்து டிப்பர் லாரிகளையும் பறக்கும் படை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள கோனியம்மன் கோயில் அருகே குண்டுவெடிப்பு நிகழ்வு நடந்தது. அதேபோல, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது கரூர் மாவட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ள 300-க்கும் மேற்பட்ட இயக்கம் முடிந்து அனுமதி முடிந்த கல்குவாரிகள், சட்டவிரோத வெளிமாநில வெடிமருந்துகளை பயன்படுத்தி வருகின்றன.
இந்த சட்ட விரோத வெடிமருந்தை வைத்து, தமிழகத்தில் பல்வேறு விதமான குற்ற செயல்களை செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே சட்ட விரோத வெடி மருந்து நடமாட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கல் குவாரி எம் சாண்ட் மற்றும் கல் கிரசர் போன்ற ஆலைகள் அனைத்தும், வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி கட்டாமல் இருக்கின்றன. அதோடு, அரசுக்கு செலுத்த வேண்டிய பல்வேறு வரிகளை கட்டாமல், பல்லாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள். இதன் மீது உடனடியாக அனைத்து துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயங்கி முடித்த அனுமதி இல்லாத கல்குவாரிகளை இயங்க வைத்து, அந்த கல்குவாரிகள் மூலம் ஒவ்வொரு உள்ளூரில் இருப்பவர்களுக்கும் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கின்ற நடைமுறையை தற்போது கையாண்டு வருகின்றனர். எனவே, அனுமதி முடிந்த அனைத்து கல் குவாரிகளின் இயக்கத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கட்டிய அணைகள் எத்தனை? - அன்புமணி ராமதாஸ் கேள்வி - Anbumani Ramadoss