சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றிரவு (அக்.15) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை பாதிப்புகள் மற்றுந் நிவாரணப் பணிகள் குறித்து ஒவ்வொரு மண்டல வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொளி வாயிலாக கேட்டறிந்தார்.
காணொளி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிலையில், அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 17 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரும் மழை முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று நாராயனபுரம் பகுதியில் நான் ஆய்வு செய்தபோது மழை வெள்ள நீர் தடுப்புகளை உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை இன்று உடனடியாக நிறைவேற்றப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 14 நிவாரண மையங்களில் 608 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 45,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் 6 சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் மேட்லி, பெரம்பூர் சுரங்க பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சென்னையில் இன்று மொத்தம் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
இந்த மருத்துவ முகாம் மூலமாக சுமார் 4,500 பேர் பயனடைந்துள்ளனர். சளி, காய்ச்சல், தோல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு இம்முகாம்களில் மருத்துவர் உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை பொதுமக்களுக்கு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை.. மண்டல வாரியாக பெய்த மழையின் அளவு குறித்த முழு விவரம்!
இதுமட்டும் அல்லாது, சென்னையில் பெரும்பாலும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மட்டும் முன்னெச்சரிக்கையாக பத்து மின்மாற்றுகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் பற்றாக்குறை குறித்த தகவல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நின்றதும் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்படும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். உயிர் சேதம் வரக்கூடாது என்பதுதான் அரசின் ஒரே குறிக்கோள்.
மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் பின்னர் வாங்கப்படும். அதற்காக மேம்பாலங்களை கார் பார்க்கிங்கலாக பயன்படுத்த முடியாது. காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்