சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி இன்று (ஜூன் 28) சட்டமன்றப் பேரவையில்
ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாகவும், தேசிய அளவில் இந்த தேர்வு முறையை ரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்துவதாகவும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு
— TN DIPR (@TNDIPRNEWS) June 28, 2024
(1/2) pic.twitter.com/bfQov86rX4
தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்த தேர்வு முறை மாணவர்களுக்குத் தேவையற்ற கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது தமிழ்நாட்டினுடைய கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கவும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், இதுநாள் வரையில் அக்கோப்பு நிலுவையில் உள்ளதாக தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் கடிதம்#CMMKSTALIN | #TNDIPR |@PMOIndia @CMOTamilnadu @mp_saminathan pic.twitter.com/4V4fZV6qqf
— TN DIPR (@TNDIPRNEWS) June 28, 2024
இதற்கிடையே, சமீபத்தில் நடந்த நீட் தேர்வின்போது நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்விற்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், பல மாநிலங்களும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று நீட் தேர்வு முறையை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டுமென்றும், தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்திய பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் இவ்விஷயத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரியுள்ளார்.
எட்டு மாநில முதல்வர்களுக்கு கடிதம்: அதேபோல், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு அவர்களது சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்" என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "மக்கள் விரும்பியும் என்னை டெல்லி போக விடாமல் தடுத்துவிட்டார்கள்" - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு! - TN Assembly session 2024