சென்னை: தமிழ்நாட்டில் தொழில்துறையை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதன் விளைவாக தற்போது ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடாவின் பிரீமியம் கார் நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர் (Jaguar Land Rover) கார் உற்பத்தி ஆலைக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மார்ச் 13ஆம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் அரசுக்கும் இடையே கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைய இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது, முதலமைச்சர் அடிக்கல் நாட்டும் தேதி தொழில்துறை அலுவலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 5,000 நபர்களுக்கும் மறைமுகமாக சுமார் 15,000 பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. இதை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டாடாவின் பிரீமியம் கார் தொழிற்சாலை: டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்திய வெளிநாட்டின் ஜாகுவார் லேண்ட்ரோவர் வகை பிரீமியம் கார்கள் இனி தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும். இதில் முக்கியமாக ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் பயன்படுத்தும் டிஃபெண்டர், ஜாகுவார் செடான் மாடல் சொகுசு கார்கள் புதிய ராணிப்பேட்டை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும். இதனால் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
இதையும் படிங்க: RGBSI நிறுவனத்துடன் ரூ.100 கோடி முதலீடு ஒப்பந்தம் கையெழுத்து!
மேலும், புதிய தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக உற்பத்தியை பெருக்க நிறுவனம் திட்டங்களை வகுத்துள்ளன. கூடுதலாக, ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் கட்டப்படும் தொழிற்சாலையில், பிரீமியம் மின்சார கார்களையும் நிறுவனம் தயாரிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்படும் புதிய டாடாவின் தொழிற்சாலையால், அங்குள்ள மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.